தமிழக செய்திகள்

தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா சரத்குமார்..? - பரபரப்பு தகவல்

சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவராக சரத்குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பா.ஜனதாவில் மாற்றம்

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை வெளியேறினார். அவருடன் மாநில நிர்வாகிகள் சிலரும் சென்றனர். சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு அளித்த பரிந்துரையின்பேரில், தமிழக பா.ஜனதாவில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய தலைமை முடிவு செய்துள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், மத்திய மந்திரியாக இருந்த எல்.முருகன் திடீரென்று தனது மத்திய மந்திரி பதவி மற்றும் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

சரத்குமார்

எல்.முருகன் மீண்டும் பா.ஜனதா தலைவராக நியமிக்கப்படலாம் என்றும், தற்போதையை மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கப்படலாம் என்ற கருத்தும் பா.ஜனதாவில் நிலவி வருகிறது. ஆனால், பா.ஜனதாவில் ஏற்கனவே மாநில தலைவர்களாக இருந்தவர்கள் மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்படுவது பெரும்பாலும் நடந்ததில்லை.

எனவே, புதிய தலைவர் தான் நியமிக்கப்படுவார் என்று பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். அந்தவகையில் மாநிலத்தலைவர் பதவி பரிசீலனையில் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் பணி

அதேபோல் முன்னாள் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு தமிழக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்குவ தற்காக இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பதாக பா.ஜனதா வட்டாரம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT