தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியா? ஜெயக்குமார் காட்டம்

முதல்வருக்கு தெரிந்தவராக இருப்பதை விட தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும் தெரிந்தவராக இருப்பதே முக்கியம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியா? ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநர் மாளிகை சென்ற போதே தனது கடைசி படத்தின் தயாரிப்பாளரை அழைத்து சென்ற முதல்வர், தற்போது அவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆக்கியுள்ளார்.தமிழ்நாட்டை சார்ந்த தங்களின் கட்சிக்காரர்களே பலர் இருக்க இந்த முக்கிய பொறுப்பை தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒரு தயாரிப்பாளருக்கு தருவது தான் உங்கள் மாற்றமா!!

கேரள மருத்துவ கழிவுகள் விவகாரம், கர்நாடகவின் மேகதாது பிரச்சனை, மத்தியிலும் கல்விக்கான நிதி விவகாரம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் டெல்லிக்கான தமிழ்நாட்டின் சிறப்பு பிரதிநிதி, முதல்வருக்கு தெரிந்தவராக இருப்பதை விட தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும் தெரிந்தவராக இருப்பதே முக்கியம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் பட தயாரிப்பாளர்

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறவுப் பாலமாகவும், தகவல் பரிமாற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய நபராகவும் விளங்குபவர், டெல்லி சிறப்பு பிரதிநிதியாகும். இந்த பணிக்கு தமிழக அரசு, முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டம் படித்தவர்கள் போன்றவர்களை நியமிப்பது வழக்கம்.தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிகள், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வது, தமிழ்நாட்டுக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அமைச்சகங்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது வழக்கம். மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள், முக்கிய பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வார்கள். டெல்லியில் நடைபெறும் மத்திய அரசின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள், அதிகாரிகள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்பது, டெல்லி சிறப்பு பிரதிநிதியின் கடமையாகும்.

மாநில அரசின் நலன்

டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவது, முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் டெல்லிக்கு செல்லும் போது, தேவையான ஏற்பாடுகளை கவனிப்பது போன்ற பணிகளும் அவர்களுக்கு உள்ளன.அந்த வகையில், டெல்லியில் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சிறப்பு பிரதிநிதியாக இருந்து, மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதே அவரின் முக்கிய பணி. அந்த வகையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜக்கையன், செல்வேந்திரன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் பணியாற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் அந்த பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியில் சினிமா தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தற்காலிக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி உருவாக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்தப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது தேவைப்படும் வரையிலோ, இதில் எது முதலில் நேர்கிறதோ அதுவரை அந்தப் பதவி இருக்கும்.

அரசியலில் பரபரப்பு

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் வெங்கட நாராயணா. தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆரம்பத்தில் த.வெ.க. தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்திக்க செல்லும்போது வெங்கட நாராயணாவை முதல்-அமைச்சர் விஜய் அழைத்து சென்றிருந்தார். அவரது புகைப்படமும் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது. வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருக்கு மிக நெருக்கமானவர் அவர் என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்பட்டது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா தயாரிப்பாளரை தமிழக அரசு நியமித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.