சென்னை,
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் தொடரும் தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த முறை 2 தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவிடம் வலியுறுத்தியது. ஆனால், கடந்த முறையை போலவே ஒரு தொகுதி மட்டும்தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, தி.மு.க. கூட்டணியில் 6 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இன்னும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், விரக்தி அடைந்த அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், "இன்று (சனிக்கிழமை) ஒருநாள் பொறுத்திருந்து பார்ப்போம். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்" என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவுக்கு விடுக்கப்பட்ட இந்த ஒரு நாள் கெடு காலத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியை அழைக்காவிட்டால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டணியை விட்டு வெளியேறும் அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட இருக்கிறார். தேர்தலில், தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிகிறது.