தமிழக செய்திகள்

அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறதா? கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

சென்னை,

அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் கடமை. நியாயமான கோரிக்கைகளை கேள்வி எழுப்பும் போது அதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முதல்-அமைச்சர் தன்னுடைய பதிலுறையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

வேடிக்கையானது

அதிகாரிகளின் ஆட்சி நடப்பதாக கம்யூனிஸ்டு கட்சிகள் விமர்சனம் செய்ததது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதிகாரிகளின் ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் நடந்தது. கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும், அவர்கள் சொல்வதைக் கேட்டு மட்டுமே இயங்கிய ஆட்சியாக அது இருந்தது.

ஆனால், இப்போது அப்படி இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை குறிப்பிட்டு நடந்த ஒரு நிகழ்வுக்கு அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது எனக் கூறுவது வேடிக்கையானது. உண்மையில் ஒரு நேர்மையான, வெளிப்படையான தலைமை இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக பொதுவாக பேச முடியாது.‘ என்றார்.

SCROLL FOR NEXT