தமிழக செய்திகள்

“கோவை நகரம் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

சென்னை,

பேரணி நடத்த தி.க., பாஜகவிற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

அவசர வழக்கு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி பேரணி

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.

ஜனநாயக விரோத நடவடிக்கை

அதன் பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளை பரிந்துரைத்தோம். அதிகாரிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?

இந்நிலையில் இன்று நடந்த இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதன்படி, “பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பாஜகவுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?

கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.