தமிழக செய்திகள்

டாஸ்மாக் கிடங்குகளை பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியை அரசு பயன்படுகிறதா..? - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் திட்டமிட்டு பரப்பும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

உண்மைக்கு புறம்பானவை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

டாஸ்மாக் கிடங்குகளை பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் திட்டமிட்டுப் பரப்பும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் 38 மருந்துக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையும் பராமரிப்பு தேவைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகள் பாதுகாக்கப்படும் நமது மருத்துவக் கிடங்குகளை மழைக்காலங்களில் கசிவின்றி, மிகப்பாதுகாப்பாக பராமரிக்க கூடுதல் மனிதவளம் நமக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

டாஸ்மாக் நிர்வாகம்

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, TNMSC-இன் பொறியியல் பிரிவின் உதவியை டாஸ்மாக் நிர்வாகம் கோரியது. அரசின் ஒரு துறை, தனது உட்கட்டமைப்புப் பணிகளுக்காகச் சிறப்பான பொறியியல் கட்டமைப்பு கொண்ட மற்றொரு துறையின் (TNMSC Civil Wing) உதவியை நாடுவது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்.

ஒரு ரூபாய் கூட பயன்படுத்தப்படவில்லை

இதற்காகப் புற ஆதார முறையில் (Outsourcing) 5 கட்டடவியல் மற்றும் 2 மின்சார உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 7 கூடுதல் பொறியாளர்களை பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகள் முழுவதையும் டாஸ்மாக் (TASMAC) நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இதற்காக மருத்துவத்துறையின் நிதியோ, TNMSC-இன் நிதியோ ஒரு ரூபாய் கூடப் பயன்படுத்தப்படவில்லை.

கட்டமைப்பு மேலும் வலுவடையும்

தற்போது டாஸ்மாக் செலவில் பணியமர்த்தப்படும் இந்த கூடுதல் பொறியாளர்கள் மூலம், TNMSC-இன் பொறியியல் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும். மருத்துவப் பணிகள் கழகத்திற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் இல்லாமல், நமது சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளும் திறம்படவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கான தரமான மருந்து விநியோகக் கட்டமைப்பு மேலும் வலுவடையும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

உண்மை நிலை அறியாமல், வெறும் அரசியல் லாபத்திற்காக பரப்பப்படும் அவதூறுகளையும். வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் தொடர்ச்சியான மக்கள் நலப்பணிகளே சிறந்த பதிலாக அமையும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT