சென்னை,
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு என்பது உருவாக்கப்பட்ட பிம்பமா ? உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சரே பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை திசைதிருப்ப முயல்வதா? எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவைகளில் முதன்மையாக இருக்கும் அரிசியின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரிசியின் விலை உயரவில்லை எனவும், உணவுப் பொருள் தட்டுப்பாடு என்பதும் உருவாக்கப்பட்ட பிம்பம் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ எடைகொண்ட சாதாரண புழுங்கல் அரிசி மூட்டை தற்போது 1800 ரூபாய்க்கும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை மூட்டைக்கு 600 ரூபாய் உயர்ந்து 2000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அரசி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படி எதுவும் இல்லையே என்ற தொணியில் உணவுத்துறை அமைச்சர் பதிலளித்திருப்பது அவரின் அறியாமையையும், அலட்சியத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அரிசி விலை உயர்வோடு, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய துறை சார்ந்த அமைச்சரே, இது பண்டிகை காலங்களில் நடைபெறும் விசயம் எனக்கூறி அப்பிரச்னையை திசை திருப்ப முயல்வது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் துளியளவும் பொருத்தமற்றதாகும்.
எனவே, சாதாரண நாட்களாக இருந்தாலும் பண்டிகை காலமாக இருந்தாலும் விலை உயர்வால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பதை உணர்வதோடு, உணவுத்துறைக்கு தான் அமைச்சர் என்பதையும், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதையும் இனியாவது உணர்ந்து, இதுபோன்ற திசைதிருப்பும் செயல்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியிருக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சரையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.