டிடிவி தினகரன் 
தமிழக செய்திகள்

முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் பால் பொருட்களின் விலை உயர்வா? - டிடிவி தினகரன் கண்டனம்

நடைமுறையில் இருந்த விலையிலேயே பால் பொருட்களை விற்பனை செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் பால் பொருட்களின் விலை உயர்வா? என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவின் பொருட்கள் விலை உயர்வு

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்வு – முதல் - அமைச்சர் ஆய்வு செய்ததன் விளைவுதான் இந்த விலை உயர்வா? ஆவின் நிர்வாகத்தின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தவெக ஆட்சி அமைந்தது முதலே மின் கட்டணம் தொடங்கி அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வரை பல்வேறு சுமைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது அவர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தயிர், நெய் போன்ற பால் பொருட்களின் விலைகளையும் உயர்த்துவதன் மூலம் அவர்களுக்குக் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தக் கூடிய பண்டிகை நாட்களைக் குறிவைத்து வெறும் லாப நோக்கில் ஆவின் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியிருக்கும் தவெக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், கடந்த மாதம் முதல் - அமைச்சர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு செய்த பிறகு அதிகரித்து வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை, சிறைக்குச் சென்று ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, தற்போது கைதிகள் தப்பியோடிய சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனத்திற்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்துவந்த நிலையில், தற்போது பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது, முதலமைச்சரின் ஆய்வுகள் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கா? அல்லது அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கான முன்னறிவிப்பா? என்ற அச்சத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

முதல் - அமைச்சரின் ஆய்வுகள் என்பது வெறும் ரீல்ஸ் விளம்பரத்திற்கான நிகழ்வுகளாக இல்லாமல், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக அமைய வேண்டும் என்பதை முதல் - அமைச்சர் இனியாவது உணர்வாரா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுகிறது. எனவே, நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளுக்கான விலை உயர்வு உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விலையிலேயே பால் பொருட்களை விற்பனை செய்திட வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT