சென்னை,
சமூகநீதி என்ற பெயரில் மத அரசியல் செய்கிறதா தவெக அரசு? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் கிடையாது’ என்ற இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக, ‘இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய, தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்’ என கூறியுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.
மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, ‘ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதனால் மட்டுமே அவர் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர் ஆகிவிட முடியாது’ எனவும், ‘சமூகத்தின் பின்தங்கிய நிலை என்பது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; அது குறிப்பிட்ட சமூக அமைப்போடு தொடர்புடையது’ எனவும் கடந்த அக்டோபர் மாதம் தான் தெளிவான தீர்ப்பை வழங்கியது.
அப்படியிருந்தும், உச்ச சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக, மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என தவெக அமைச்சர் கூறுவது, தேசத்தின் நடுநிலை தன்மைக்கு விடப்படும் நேரடி சவால்!
ஏற்கனவே முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தை, ‘சிக்கந்தர் மலை’ என்று கூறி ஒருபுறம் இஸ்லாமிய சமூகம் போரடி கொண்டிருக்கையில், ‘இஸ்லாம் மதத்திற்கு மாறினால், இட ஒதுக்கீடு’ என்ற ரீதியில் தவெக அமைச்சர் உறுதியளிப்பது, சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். மேலும், இது கட்டாய மதமாற்றத்தையும், சலுகைகளுக்காக மட்டுமே மதம் மாறும் அவலத்தையும் சமூகத்தில் ஊக்குவிக்கும்!
இதனால், பாரம்பரிய இஸ்லாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு பலன்களும், மற்ற மதங்களின் சமூக நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும்! எனவே, வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் ‘தரம் மற்றும் நிலைத்தன்மையில் முதல்-அமைச்சர் சமரசம் செய்ய கூடாது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.