பழனி,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பல்வேறு கட்டண சேவை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜைப் பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்க தொட்டில், தங்க ரத புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக்கோவிலின் வருவாய் ரூ.103 கோடியை எட்டி வரலாற்றில் முதல்முறையாக சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2025-ம் ஆண்டு ஜூலை முதல் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான நடப்பு பசலி ஆண்டில் கிடைத்த மொத்த வருவாய் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ஆகும். இதில் பஞ்சாமிர்தம் விற்பனையில் ரூ.63 கோடியே 16 லட்சத்து 7 ஆயிரத்து 320 கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற 1433-ம் பசலி ஆண்டில் ரூ.86 கோடியே 6 லட்சத்து 6 ஆயிரத்து 774-ம், 1434-ம் பசலி ஆண்டில் ரூ.97 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 918-ம் வருவாய் கிடைத்தது. அதேபோல் அன்னதான பிரசாதம், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட 28 கட்டணமில்லா சேவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.