சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை, திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அங்கு வந்திருந்த தவெக நிர்வாகிகளின் காலணிகளை கைகளால் அப்புறப்படுத்த வைத்ததாக வெளியான காணொளி கடும் கண்டனத்திற்குரியது.
அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை கொள்கைத் தலைவர்கள் என்று கூறும் தவெக-வினர் தூய்மைப் பணியாளர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற பிற்போக்குத் தனமான தீண்டாமையை அரங்கேற்றியிருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல். கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்காத்த தூய்மைப் பணியாளர்களுக்கு தவெக அரசு தரும் மரியாதை இதுதானா? இனி இதுபோன்ற செயல்களைத் தடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களை கண்ணியமாக நடத்திட வேண்டும் என வேண்டும் முதல்வர் விஜய் அவர்கள் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.