தமிழக செய்திகள்

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் இசக்கி சுப்பையா சந்திப்பு

இசக்கி சுப்பையா மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு மீது கடந்த மே 13-ந்தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 25 பேர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க., அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம், அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். உடனடியாக அவர்கள் த.வெ.க.வில் சேர்ந்தனர்.

‘மனப்பூர்வமாக ராஜினாமா செய்தேன்'

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் இந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த பதில் மனுவில், “சொந்த விருப்பத்தில் மனப்பூர்வமாக ராஜினாமா செய்தேன். கட்சி மீதான நம்பிக்கை இழப்பால் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து 13 நாட்கள் கழித்து ராஜினாமா செய்தேன். எனக்கு எதிரன தகுதி நீக்க விசாரணைக்கு சபாநாயகரிடம் விளக்கம் அளித்துள்ளேன். குதிரை பேரம் என்பது வெறும் யூகம்” என்று கூறியிருந்தார்.

சபாநாயகருடன் சந்திப்பு

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தார். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்து சபாநாயகரிடம் அவர் விளக்கமளித்து வருகிறார். முன்னதாக, இசக்கி சுப்பையா மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.