சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 'பாரதிய அந்தரிக்க்ஷ் ஹேக்கத்தான்' (பி.ஏ.எச்.) 2026-என்ற மாணவர் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து, புதிய மென்பொருள் அல்லது வன்பொருள் தீர்வுகளை உருவாக்கும் கூட்டுப் போட்டியை அறிவித்துள்ளது. 3-வது ஆண்டாக நடக்க இருக்கும் இந்த போட்டி, மாணவர்களுக்கு விண்வெளி-தொழில்நுட்பச் சூழலில் பங்களிக்க வாய்ப்பளிக்கிறது.
இந்தப் போட்டியில், அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களில் தற்போது பயிலும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பணிபுரியும் வல்லுநர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதிபெறும் குழுக்கள் 3 முதல் 4 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புகள் அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே குழுவை உருவாக்க முடியும்.
இதற்கான பதிவு மற்றும் யோசனை சமர்ப்பிப்புகள் தொடங்கிய நிலையில், சவால்களின் தொழில்நுட்ப நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதற்காக, இஸ்ரோ நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 சிறப்பு விளக்க அமர்வுகளை நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு கட்டணம் ஏதுமில்லை, முற்றிலும் இலவசமாகப் பங்கேற்கலாம். தகுதியுள்ள மாணவர்கள், அதிகாரப்பூர்வ 'Hack2skill என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 1-ந்தேதி ஆகும்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் அணிகளின் இறுதிப்பட்டியலை இஸ்ரோ வருகிற ஜூலை 20-ந்தேதி வெளியிட உள்ளது. அதற்கு அடுத்த நாள் (ஜூலை 21) அறிமுக அமர்வு நடைபெறும். இறுதியாக, ஆகஸ்டு 6 மற்றும் 7-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள 30 மணி நேர நேரலை இறுதிப்போட்டியுடன் இந்த ஹேக்கத்தான் நிறைவடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.