சென்னை,
'இஸ்ரோ 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டு களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது' என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
இந்தியாவின் சொந்த 'நாவிக்' என்ற வழிசெலுத்தல் அமைப்பிற்கான 2-ம் தலைமுறை செயற்கைக்கோள் என்.வி.எஸ்-03 ஆகும். அமெரிக்காவின் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி - எல்-1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் தாழ்வான புவிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில், அதிக எடை சுமக்கும் திறன் கொண்ட எல்.வி.எம்-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட்டிலிருந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ராக்கெட் தான் எல்.வி.எம்-3 ஆகும்.
இந்த திட்டத்திற்கான 3 சோதனை ராக்கெட்டுகளில் முதல் ராக்கெட் வருகிற நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள்-01 என்பது 35-க்கும் மேம்பட்ட உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களைச் சோதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இந்திய தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-63 ராக் கெட் மூலம் வருகிற நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.
அதிநவீன புவிநிலைத் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் 4.5 டன் எடை கொண்ட ஜிசாட்-என்3 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இது, எல்.வி.எம்3-எம்-7 ராக்கெட் மூலம் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது. கடல்சார் அறிவியல் மற்றும் தொலை உணர்வுத் திறன்களை மேம்படுத்துவதற்காக, இஸ்ரோ தயாரித்த இ.ஓ.எஸ்-10 (ஓசோன்சாட்-3ஏ) என்ற இந்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. என்-1 ராக்கெட் மூலம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதனை தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.வி. எல்-2 ராக்கெட் மூலம் இந்தியாவின் 'விண்வெளி சார்ந்த கண்காணிப்பு-3' (எஸ்.பி.எஸ்-3) திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆக வருகிற மார்ச் மாதத்திற்குள் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு களத்தில் தீவிரமாக இறங்கி உள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.