சென்னை,
நிலவின் தென் துருவத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ஜப்பான் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) ஆகியவை இணைந்து சந்திரயான்-5 என்று அழைக்கப்படும் நிலவு துருவ ஆய்வு (லூபெக்ஸ்) திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்கான விண்கலம் ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஜப்பானின் எச்.3 ராக்கெட்டைப் பயன்படுத்தி வருகிற 2028-ம் ஆண்டு ஏவப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ தயாரித்த லேண்டரும், ஜப்பான் தயாரித்த ரோவரும் இதில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்திய லேண்டர், ரோவரை பாதுகாப்பாக நிலவின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்லும். அங்கு சென்றதும், சுமார் 350 கிலோ எடையுள்ள ஜப்பானிய ரோவர், நிலவைச் சுற்றி வந்து, அதன் மண்ணில் சுமார் 5 அடி ஆழம் வரை துளையிட்டு, மாதிரிகளை சேகரிக்கும். பனிக்கட்டி மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்ய சிறப்பு கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது. தரவுகளைச் சேகரிப்பதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (இ.எஸ்.ஏ.) கருவிகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த பயணம் நிலவில் குறைந்தது மூன்றரை மாதங்களிலிருந்து ஒரு ஆண்டுகள் வரை பணியில் இருக்கும். இது, 2023-ல் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 திட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றியை அடிப்படையாகக் கொண்டது.
திட்டமிடப்பட்ட சந்திரயான்-5 விண்கலம் ஏவுதலுக்கு முன்னதாக, இஸ்ரோ குழுவினர் ஏவுதள வசதிகளை ஆய்வு செய்ய ஜப்பான் நாட்டிலுள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு, உபகரணங்களையும், அமைப்புகளையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ராக்கெட் புறப்படுவதற்கு முன்பு, லேண்டர் மற்றும் ரோவர் ஏற்றப்படும் பகுதிகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். விண்கலம் நிலவை நோக்கிச் செல்லும்போது அனைத்தும் சீராக இயங்குவதை சோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளனர். தயாரிப்புப் பணிகள் தொடரும் நிலையில், நிலவை நோக்கிய இந்த கூட்டுப் பயணத்தில் இந்தப் பயணம் ஒரு அற்புதமான மைல்கல்லாக அமைகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.