சேலம்,
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகள போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வ தற்காக சேலம் உள்பட 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தடகள போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலை 11.15 மணியளவில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போட்டி நடக்கும் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். முதலில் அவர் அங்குள்ள கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது. இதைக்கண்டு அங்கிருந்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர், கலெக்டர் இளம்பகவத், லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும் தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அமைச்சர் தேசியக் கொடியை வேகமாக கீழே இறக்கினார். பின்னர் கொடி சரியாக கட்டப்பட்டு கம்பத்தில் மீண்டும் ஏற்றப்பட்டது.
சேலத்தில் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசியக்கொடி தலைகீழாக பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், தேசியக் கொடியை தலைகீழாக கட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் ஜான் ஜமீன்தாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.