சென்னை,
4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும், மீண்டும் குறுக்கிட்டு பேசினார். அவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்திய சபாநாயகர், வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டார்.
இதன் பின்னர் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், “வனத்துறை அமைச்சர் அவ்வாறு பேசியிருக்க கூடாது. அவர் சார்பில் எதிர்க்கட்சிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.