தமிழக செய்திகள்

சட்டசபை நேரலை நிறுத்தப்பட்ட விவகாரம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சட்டப்பேரவை நேரலை போய்க்கொண்டு இருந்தது என்ற நம்பிக்கையில்தான் நானும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன் என்று ராஜ்மோகன் கூறினார்

தமிழக சட்டசபையில் நேற்று நேரலை நிறுத்தப்பட்டது எனக்கே தெரியாது என்றும், நேரலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு..சட்டமன்ற நேரலை தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். அதேபோல, ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு அடிக்கப் பாய்ந்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்தார்.

நேரலை நிறுத்தம்

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த நிகழ்வு முழுவதும் நேரலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் கொடுத்த வாக்கை முதல்வர் விஜய் காப்பாற்றி இருப்பதாகவும் இனி சட்டமன்ற நேரலை தொடரும் என்றும் கூறினார். இந்த நிலையில், நேற்று சட்டமன்றத் கூட்டத்தொடர் தொடங்கியது. மேகதாது அணைக்கு எதிரான முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதுவரை நேரலை செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு நேரலை நிறுத்தம் செய்யப்பட்டது. சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக வழங்கப்படும் என தவெக அரசு உறுதி அளித்த நிலையில், நேற்றைய விவாதத்தின் நேரலை பாதியில் துண்டிக்கப்பட்டு இருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

தவெக அரசின் நிலைப்பாடு

சட்டப்பேரவை நேரலை போய்க்கொண்டு இருந்தது என்ற நம்பிக்கையில்தான் நானும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இடையில் நான் ரெஸ்ட் ரூம் வரும் போதுதான், அங்கு இருந்த காவலாளிகள் என்னிடம் ரொம்ப நல்லா பேசுறீங்க, லைவ் போகவில்லை என்று சொன்னார்கள். ஏற்கனவே சொன்னதுதான், ஜனநாயகத்தில் சட்டமன்றத்தில் நேரலை தொடரப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

அதிகாரிகள் அனைவருடன் பேசி மீதி உள்ள நாட்களில் நேரலை தொடரும் என்பதே எங்களின் நிலைப்பாடு. சட்டமன்ற நேரலை கட் ஆனது எனக்கு தெரியாது. நான் உள்ளே இருந்ததால், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. சட்டமன்றத்தில் நேரலை தொடரும். ராயபுரம் எம்.எல்.ஏ அடிக்க பாயவில்லை. அவர் பின்னாடி இருந்தார். என்ன விஷயம் என்று தெரியாமல் கொஞ்சம் எழுந்து பார்த்தார். வன்முறை எதுவும் இல்லை.. சட்டமன்றம் சுமுகமாகவே சென்றது" என்றார்.