கோவை,
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரிண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஐ.டி. ஊழியரை குனியமுத்தூர் பி.கேபுதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்தார். அதை நம்பி அவர் அங்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் ஐ.டி. ஊழியரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஐ.டி. ஊழியரை சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து ஜிபே மூலம் ரூ.1,400-ஐ தங்களது செல்போனுக்கு பரிமாற்றம் செய்தனர். மேலும் ரூ.20 ஆயிரம் எடுத்து வருமாறு மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஐ.டி. ஊழியரை தாக்கி பணம் பறித்தது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த விஷ்ணு (19 வயது), கபில் மாதேஷ்வரன் (19 வயது), கார்த்திகேயன், கதிரவன் என்பது என்பது தெரியவந்தது. இதில் விஷ்ணு, கபில் மாதேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.