சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியை பார்த்து பழிப்பது கண்டு கொடநாடு எஸ்டேட் மரங்களும் மண்ணும் அங்கு நடந்த மர்மங்களும்கூட பல்லைக் காட்டி சிரிக்கின்றன.
தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியில், ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?
பழனி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் சிரத்தையுடன் இறங்கி உள்ளது தெரியாமல், பத்தாம்பசலித்தன அரசியல் அறிக்கை விடுவது ஏனோ?.
ஆட்சி அதிகாரத்திற்காக, பதவி சுகத்திற்காக, மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசை பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரும் நகைச்சுவை.
ஏ.ஐ. தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ் பற்றிப் பேசி அழுதாலும் இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இளைஞர்களுக்காக, பெண்களுக்காக,விவசாயிகளுக்காக என அனைத்து தரப்பு மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த அரசை ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.