சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில் மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து குறைந்து வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது தி.மு.க. ஆனால், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5% குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது.
நாடு முழுவதும் சில பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பைத் தன்னுடைய சாதனையாக தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது. தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.