சென்னை,
சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாளன்று சிலைக்கு மாலை அணிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தினுடைய முதல்-அமைச்சர்கள் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தலைவர்களுடைய சிலைக்கும் மாலை அணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். கடந்த காலங்களில் சென்னை கிண்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு அனைத்து முதல்-அமைச்சர்களும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தீரன் சின்னமலை நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து தலைவர்களுடைய சிலைக்கும் இதே போல தான் பாரபட்சம் இல்லாமல் தொடர்ந்து முதல்-அமைச்சர்களால் மரியாதை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போதைய தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் தேர்ந்தெடுத்து ஒரு சில தலைவர்கள் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து கொண்டிருக்கிறார்.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சென்னையில் நேற்று மாலை அணிவித்தது பெருமைக்குரியதுதான். அதே சமயத்தில் தீரன் சின்னமலையினுடைய நினைவு நாளான ஆடி 18 அன்று முதல்-அமைச்சர் சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. எல்லா தலைவர்களுமே தங்கள் வாழ்க்கையை இந்த நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.
இந்த சமூகம் முன்னேற வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு தியாகம் செய்து உயிர்நீத்த தலைவர்களுடைய சேவைகளை பிரித்து பார்க்க கூடாது. அனைவரையும் சமமாக கருத வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இப்படிப்பட்ட வித்தியாசங்களை பார்க்காமல் ஒரே மாதிரியான பார்வைகளோடு அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.