தமிழக செய்திகள்

ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை - அமைச்சர் செங்கோட்டையன்

தி.மு.க. ஆதரவுடன் முதல்-அமைச்சராக குதிரை பேரத்தில் ஈடுபட்டது யார் என அவர்களுக்கே தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரு பிரிவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர். இதில் சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த சூழலில் அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதற்காக அவர் சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து டைப் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அந்த கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், கடிதத்தை கைப்பட எழுதி தருமாறு இசக்கி சுப்பையாவிடம் அறிவுறுத்தினார். இதன் பேரில் இசக்கி சுப்பையா, தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி சபாநாயகரிடம் வழங்கினார். அந்த கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா, தவெகவில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றதால் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைகின்றனர். ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. நானே ராஜினாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன். எடப்பாடி பழனிசாமி நினைத்ததை உடைத்தெறிந்திருக்கிறார் இசச்கி சுப்பையா.

முதல்-அமைச்சர் விஜய் ஜனநாயகத்தை பாதுகாப்பார். திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆதரவுடன் முதல்-அமைச்சர் ஆவேன் என்று சொன்னது யார். த.வெ.க. எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை. முதல்-அமைச்சரின் செயல்பாடுகளை பார்த்து அவர்களாக த.வெ.க.வில் வந்து இணைகிறார்கள். உங்கள் மனதில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதற்கு காலம் பதில் சொல்ல முடியும்.

அதிமுகவினரை த.வெ.க.வில் நான் கட்சியில் இணைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் எடப்பாடி என்னை மட்டுமே விமர்சிக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை விட தன் படத்தை பெரிதாக போடுபவரிடம் மட்டும் தான் எடப்பாடி சிரித்து பேசுகிறார். ஜெயலலிதா புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு தனக்கு பாராட்டு விழா நடத்தியவர் தானே அவர். அ.தி.மு.க.வின் சரிவுக்கு அவர் தான் காரணம். அதிமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரையும் த.வெ.க.வில் இணைக்கவில்லை.

புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. 6 மாதம் விமர்சிக்க மாட்டோம் என கூறிவிட்டு, இப்போது குறை கூறுவது சரியா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.