தமிழக செய்திகள்

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது உண்மைதான் - எச்.ராஜா

போதைப்பொருள் பரவலாக்கலே குற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திமுக ஆட்சியில் நடந்தது போல் தினந்தோறும் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தவெக ஆட்சியிலும் நாள்தோறும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

ஆட்சி மாறிய பிறகும் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் படுகொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களும் தொடர் நிகழ்வுகளாகவே இருப்பது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும், விரக்தியிலும் ஆழ்த்தி இருக்கின்றது.

போதைப்பொருள் பரவலாக்கலே குற்ற சம்பவங்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக விளங்குகிறது.

சட்டம் ஒழுங்கையும், காவல்துறை நிர்வாகத்தையும் தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழகத்தில் குற்றங்களை அறவே ஒழித்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து திமுகவுக்கு போட்டியே தவெக தான் என சொல்லிக்கொண்டு...

திமுக ஆட்சியின் நீட்சியாகவே தவெக ஆட்சியும் இருக்கின்றது என்பது தான் உண்மை என மக்கள் பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.

திமுக போலவே தவெகவும் மக்கள் நலனில் அக்கறை சிறிதுமின்றி இருப்பதாகவே நாள்தோறும் நிகழ்ந்தேறும் அவலங்கள் அதை உறுதி செய்வது போலவே உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்துகின்றன.

திமுக ஆட்சியில் சீரழித்ததை விட தவெக ஆட்சியில் தமிழகம் மோசமாக சீரழிந்து கொண்டிருக்கிறது என்கிற நிலை உருவாகி வருவதாக தமிழக மக்கள் வேதனையோடு விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.