சென்னை,
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்.. ஆறு மாத கால தவெக ஆட்சியின் ஆகப் பெரும் சாதனை இதுதானா? இந்த லட்சணத்தில், வளமிக்க தமிழகத்தை உருவாக்குவோம் என முதலமைச்சர் அறைகூவல் விடுப்பது வேடிக்கையானது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்"
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாத காலத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைப் பலமுறை அமமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சுட்டிக்காட்டியபோதெல்லாம் அதனை ஏற்க மறுத்து, செயற்கையான விலை உயர்வு, மற்ற மாநிலங்களில் மட்டும் விலைவாசி குறைவா?, Social Status, மேற்காசிய நாடுகளின் போர், பருவமழை (Monsoon), ரூபாயின் மதிப்பு எனப் பொருளாதார நிபுணர்களைப் போலப் பல்வேறு காரணங்களைக் கூறி மழுப்பி வந்த தவெக அமைச்சர்கள், விலைவாசி உயர்வைக் கண்காணித்து உரிய நேரத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதன் விளைவாக, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 7.29 சதவிகிதமாக சில்லறை பணவீக்கம் உயர்ந்து, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு, உண்மை நிலவரத்தை மூடி மறைப்பதிலேயே முனைப்பு காட்டிய தவெக அரசு, தற்போது அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்; பதுக்கலைத் தடுத்திருக்கிறோம் எனப் பெருமை பேசுவது, "உயிரோடு இருக்கும்போது உதவ மறுத்துவிட்டு, இறந்த பிறகு ஒப்பாரி வைப்பதைப் போல" உள்ளது.
நியாயவிலைக் கடைகளில் அமைச்சர்கள் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே தீர்ந்துபோன வெங்காய விற்பனை; கிலோ 30 ரூபாய்க்குத் தரமான சன்னரக அரிசி என்ற பெயரில், ரேஷன் அரிசியையே மீண்டும் பாலிஷ் செய்து வழங்கிய ஏமாற்று வேலை என, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தங்களது நிர்வாகத் திறமையின்மையை ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்தி, தினந்தோறும் மக்களை ஏமாற்றி, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு சென்றுள்ள இந்த அவலநிலைக்குத் தற்குறித்தனங்கள் நிறைந்த தவெக ஆட்சியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம், அண்டை மாநிலங்களை நாடி செல்லும் தொழில் நிறுவனங்கள், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஒற்றை இலக்க சதவீதத்தில் இருக்கும் GST வரி வருவாய், மின் தட்டுப்பட்டால் முடங்கியுள்ள தொழில் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என கடந்த ஆறு மாத கால தவெக ஆட்சியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை தனது திறனற்ற நிர்வாகத்தால் அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டு "வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்" என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் எந்த நம்பிக்கையில் அறைகூவல் விடுகிறார்.
எனவே, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்றும், அவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை என்றும் Paid Virtual Warriors மூலமாகச் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரசாரம் செய்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.