சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தகுதிகாண் பருவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வி துறையில் கருணை அடிப்படை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கீழ் நிலைப்பதவியில் இருந்து பணி மாறுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஈர்க்கப்பட்டவர்கள் போன்ற முறைகளில் நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு தகுதிகாண் பருவம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தின்படி 5 ஆண்டுகள் வரை நீடித்து, அக்காலக்கட்டத்திற்குள் துறை தேர்வு களில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தில் தகுதி காண்பருவத்தினர் நிர்ணயிக்கப்பட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் வரை தகுதி காண் பருவத்தை தனியர் பொருட்டு நீட்டிப்பு செய்யலாம் என்றும், அவ்வாறு 5 ஆண்டுகளுக்குள் துறை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தகுதிகாண் பருவத்தினை முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பட்டுள்ள வரம்புக்குள் தேர்ச்சி பெறாதவர்களை தகுதி காண் பருவத்தை முடிவுக்கு கொண்டுவந்து பணியில் இருந்து விடுப்பு செய்ய வேண்டுமே தவிர, அவர் களை பணியில் தொடர அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை.
எனவே இனிவரும் காலங்களில் மேற்கூறிய சட்டப்பிரிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் இது தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தின்படி உதவி யாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தகுதி காண் பருவம் முடித்தல் தொடர்பாக மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரி விக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.