காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; -அதிமுக எம்.எல்.ஏக்கள் சுயமாக ராஜினாமா செய்து தவெகவில் இணைகிறார்கள். இதில் குதிரை பேரம் எதுவும் இல்லை. திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், தவெக எம்.எல்.ஏவுக்கு காசு கொடுத்து நடத்தியதுதான் குதிரைபேரம்.
திமுகவினர் நடத்திய பேரம் தொடர்பான பேச்சுவார்த்தைதான் சட்டப்படி குற்றம். எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பாக யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது? தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் என்ற வார்த்தையை சொன்னாலே அதிகாரிகள் பயப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு பெண்கள் குறித்த பிரச்சினை அதிகரிக்கவில்லை.
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மக்களே பேசுகிறார்கள்” என்றார். அதிமுகவில் இருந்து இதுவரை 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்.எ.ஏக்களை விலைக்கு வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், கவர்னரிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான், பிரவீன் சக்கரவர்த்தி தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று பேசியிருக்கிறார்.