சென்னை,
சத்தியபாமாவை உருவக்கேலி செய்து மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதும், பொதுவாழ்வில் தொடர்ந்து பயணிப்பதும் எளிதான செயல் அல்ல. பெண் என்பதனாலேயே தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கும்., கேலிக்கும் உள்ளாவதை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திமுகவின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒருபெண்ணை உருவக்கேலி செயவது அரசியல் விமர்சனம் அல்ல. இதுபோன்ற பேச்சுக்களை இன்றைய தலைமுறைப் பெண்கள் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் ஆண் தலைவர்கள் உணர வேண்டும். பொதுவாழ்வில் பெண்களின் கண்ணியத்தைக் காப்பதில் ஆண்களுக்கும், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.