சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகத்தின் நீர்வளத்தை பாதிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும், இவ்விவகாரத்தில் பிரத்தியேக நடுவர் நீதிமன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்தை ஏற்று, அதனை தீர்மானத்தில் திருத்தமாக இணைத்த முதல்-அமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசினர் தீர்மானத்திற்கு கொள்கை அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளையில், தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், டெல்டா மாவட்டங்களின் நீர்வளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.