நாகர்கோவில்,
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு தி.மு.க.வில் வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேசிடம் வாழ்த்துப் பெற்றார். மேலும் குமரி மாவட்ட தி.மு.க. நிர்வாகி களும், மாநில நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து பி.டி.செல்வகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தனது ரசிகர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இத்தனை நாட்களும் அநியாயம்தான் செய்துள்ளார். எந்த ரசிகருக்கும் அவர் நல்லது செய்ததில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடியவர் விஜய். சினிமா துறையிலும் அவர் யாருக்கும் எந்த ஒரு நல்லதும் செய்ததில்லை. அதேபோல சக நடிகர்களுக்கும் நல்லது செய்ததில்லை.
ஒரு தலைவன் என்றால் உடன் இருப்பவர்களை வாழ வைக்க வேண்டும். அதுதான் நல்ல தலைவனுக்கு அழகு. நான் அவருடன் இருந்தது பாவம். அதற்கு விமோசனம் தேடுகிறேன். த.வெ.க.வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போலி அரசியல்வாதி. 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல்வாதியாக இருந்து ஏராளமான பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.
தற்போது அவருக்கு ஓய்வு எடுக்க ஒரு இடம் தேவை. அதனால் த.வெ.க.வில் இணைந்துள்ளார். கண்டிப்பாக அவர் டெபாசிட் இழப்பார். வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் படுதோல்வி அடைவார். விஜய் ஒரு துரோகி; இளைஞர்கள் விஜய்யை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம்.
தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார். அவருக்கு தோல்வி பிடிக்காது, தோற்ற படத்தின் தயாரிப்பாளர் வந்தால் வீட்டிற்குள் சேர்க்கமாட்டார். நான் இல்லை என்று சொல்லுங்கள் என ஒளிந்து நின்று பார்ப்பார். இளைஞர்களுக்கு விஜய் வரவு பெரும் ஆபத்து. இவ்வாறு அவர் கூறினார்.