தமிழக செய்திகள்

கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது கடினம்; திருமாவளவன்

கூட்டணி இல்லாமல் தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை

தி.மு.க. இனிவரும் தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தி இருந்தார். திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய ஆ.ராசா, தி.மு.க. தனது கொள்கைகளை காப்பாற்றவும், கட்சியைத் தற்காத்துக்கொள்ளவும், இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆ.ராசாவின் கருத்து குறித்து டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து திருமாவளவன் கூறியதாவது:-

கூட்டணி இல்லாமல் தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. தி.மு.க. தனித்துப் போட்டியிடுவது என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். இது அவர்களின் கட்சி முடிவு என்பதால் அவர்களே தீர்மானிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தி.மு.க. 60 இடங்களில் வென்றது. கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சியை நிலைநிறுத்துவது என்பது கடினம்.இவ்வாறு அவர் கூறினார்.