த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் நேற்று முன்தினம் பரபரப்பு கருத்தை வெளிப்ப டுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அ.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தால் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினார்
இந்த தேர்தல் யார் நண்பர்கள், பகைவர்கள்? என்பதை எங்களுக்கு அடையாளம் காட்டி உள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார்? என்பதை அவர்களுக்கு காட்டுவோம். அ.தி.மு.க. என்பது ஏதோ தீண்டத்தகாத சக்தி போல் இவர்கள் (கம்யூனிஸ்டு) பேசுகிறார்கள். ஏன், இவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ராஜ்ய சபா எம்.பி. பதவி வாங்கவில்லையா?. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறவில்லையா?. அப்படியே நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?.” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை. இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.