கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கல்லூரி செல்ல விருப்பமில்லை... ஐ.டி.ஐ. மாணவர் எடுத்த விபரீத முடிவு

மாணவர் கடந்த சில நாட்களாக கல்லூரி செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் டி.ஜி.புதூர் அருகே உள்ள காளியூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (22 வயது). இவர் கொடிவேரி பகுதியில் செயல்பட்டு வரும் கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. ரோபோட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நவநீதகிருஷ்ணன் கடந்த 24-ந்தேதி முதல் கல்லூரி செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல நவநீதகிருஷ்ணனின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். நவநீதகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மதியம் அய்யாவு வீட்டுக்கு வந்தபோது நவநீதகிருஷ்ணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.