தமிழக செய்திகள்

ஜல் ஜீவன் 2.0 மத்திய அரசுடன் ஒப்பந்தம்: தமிழக அரசு

முதற்கட்ட உயிர் நீர் இயக்க திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும்.

சென்னை,

ஒப்பந்தம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் மற்றும் மத்திய அரசின் ஜல் சக்தித் துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், மத்திய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

காணொலி காட்சி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (2.6.2026) சென்னை, தலைமை செயலகத்திலிருந்தும், மத்திய அரசின் ஜல் சக்தி துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் புதுதில்லியிலிருந்தும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட கூட்டத்தில், அவர்கள் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்க காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை கிராம திட்டங்கள்

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 இலட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் 21,258 ஒற்றை கிராம திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட உயிர் நீர் இயக்க திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18,123.05 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும்.

முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி

உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்க காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும்.

உறுதிப்பாட்டை

உயிர் நீர் இயக்கத் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

காணொலி காட்சி

இந்த நிகழ்ச்சியில் புது டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய ஜல் சக்தி மற்றும் இரயில்வே துறை இணை மந்திரி வி. சோமன்னா, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதார துறை செயலாளர் அசோக் கே.கே. மீனா, இ.ஆ.ப., புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமை செயலாளர் ஆர். ஜெயா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை செயலகத்திலிருந்து தலைமை செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலாளர் எஸ். கணேஷ், இ.ஆ.ப., உயிர் நீர் இயக்க திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.