திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. லால்குடி போலீஸ் துணை சூப் பிரண்டு ராஜமோகன், தாசில்தார் தமிழ்செல்வன் ஆகியோர் ஜல்லிக் கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. இதில் 580 காளைகள் களம் கண்டன. அவற்றை அடக்க 230 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குக்கர், கிச்சன் செட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 52 பேர் காயமடைந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.