சென்னை,
விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லீக் செய்துள்ளதாக விஜய் ரசிகர்களும், படத்தின் தயாரிப்பு தரப்பும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளநிலையில், இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பலரின் உழைப்பு, முதலீடு என்பதை கடந்து இந்த செயல் நேர்மையின்மையின் வெளிப்பாடு என்றும், .விஜய்யின் ஜன நாயகன் படம் லீக் ஆன நிலையில் லிங்க்கை பகிர வேண்டாம் என்றும் படக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் காட்சிகள் கசிந்தது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும், தற்போது சாட்டிலைட் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது விஜய்க்கான மிரட்டல். ஜனநாயகன் படத்தை முடக்கியது எல்.முருகனும், உதயநிதியும்தான், எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதிதான்.
ஜனநாயகன் படத்தை நிறுத்த பா.ஜ.க. எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது என தெரியும், விஜய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர். அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார் விஜய்” என்று அவர் கூறினார்.