சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் காஞ்சனா (வயது 30). இவரது மாமியார் தலையில் இருந்த கட்டியால் அவதிப்பட்டார். கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாமியார் சேர்க்கப்பட்டார். மாமியாருடன் மருத்துவமனையில் தங்கியிருந்து காஞ்சனா அவரை கவனித்து வந்தார்.
மாமியாருக்கு தலையில் ஸ்கேன் எடுப்பதற்காக காஞ்சனா அதே மருத்துவமனையில் 7-வது மாடியில் உள்ள ஸ்கேன் எடுக்கும் மையத்திற்கு சென்றார். அப்போது அங்கே, தன்னை டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் காஞ்சனாவிடம் பேசினார். உங்கள் மாமியாருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றுமாறு கூறினார். காஞ்சனாவும் மாமியார் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி உள்பட நகைகளை கழற்றிக்கொடுத்தார். அந்த நகைகளை வாங்கிய மர்ம நபர் ஒரு பையில் போட்டு வைத்துக்கொண்டார். சிறிதுநேரம் காத்திருங்கள் என்று கூறி அந்த மர்ம நபர், நகைப் பையோடு தப்பி சென்றுவிட்டார்.
காஞ்சனா மாமியாருடன் நீண்ட நேரம் காத்திருந்தார். நகை பையுடன் சென்ற டாக்டர் என கூறிய மர்ம நபர் திரும்பி வரவில்லை. அதன் பிறகுதான் அவருக்கு உண்மை புரிந்தது. நகையை எடுத்து சென்றது மட்டுமல்லாமல் காஞ்சனாவின் செல்போனையையும் அந்த மர்ம நபர் நைசாக எடுத்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக காஞ்சனா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் நகை, செல்போனை பறித்து சென்ற போலி டாக்டர் ராஜேஷ்பிரித்வி(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த அவரது நண்பர் அரவிந்தன்(30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது. இதுபோல இவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புகுந்து டாக்டராக நடித்து நோயாளிகளிடம் நகை, பணத்தை பறித்ததாக தெரிகிறது. இவ்வாறு அபகரித்த நகை, பணம் மூலம் சொந்தமாக கார் வாங்கியுள்ளனர். அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் பட்டப்படிப்பு படித்திருப்பது குறிப்பிடத்தக்கது.