சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 35). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் சரஸ்வதியிடம் வீடு வாடகை கேட்பதுபோல் பேசி உள்ளார். பின்னர் அந்த மர்மநபர் அவரை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்துகொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து நகை பறித்து சென்ற மர்மநபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சரஸ்வதியின் வீட்டு அருகே வசிக்கும் குரு விக்னேஷ் (21) மற்றும் அவரது நண்பரான மவுனிஷ் (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும் முகமூடி அணிந்து சரஸ்வதி அணிந்திருந்த தங்கசங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீசார். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் குருவிக்னேஷ், மவுனிஷ் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.