பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கிரிஜம்மா. இவர், நேற்று அதிகாலையில் தனது வீட்டு முன் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர், கிரிஜம்மாவிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 40 கிராம் தங்க சங்கிலியை பறித்தார். உடனே அவர் திருடன், திருடன் என கூச்சலிடடார். அந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.
இதனால் கிரிஜம்மாவிடம் பறித்த 40 கிராம் தங்க சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். கிரிஜம்மாவிடம் மர்மநபர் தங்க சங்கிலி பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கூட மர்மநபர், அப்பகுதியை நோட்டமிட்டதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.