நாமக்கல்,
நாமக்கல் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
கடந்த 11.06.2026 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில், ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம் அம்மன் கோவில் காடு பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வி (58) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முகத்தை மறைத்தும், கையுறைகள் அணிந்தும் வந்த இரு நபர்கள் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த மொத்தம் 16 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.20,000/- ரொக்கம் கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.
மேற்கண்ட புகாரின் அடிப்படையில் ராசிபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரம்யா பாரதி, காவல்துறை தலைவர், மேற்கு மண்டலம் உத்தரவின் பேரில், சாமிநாதன், காவல்துறை துணைத்தலைவர், கோவை சரகம் (பொறுப்பு) சேலம் சரகமின் மேற்பார்வையில், விமலா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில், ராசிபுரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் பள்ளிபாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவரான ராஜகுகன் (22), த/பெ. முருகன், முருங்கப்பட்டி, ராசிபுரம் என்பவர் புகார்தாரரின் மருமகன்கள் நடத்தும் HN Bricks நிறுவனத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வேலை செய்து வந்ததும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில், ராஜகுகனின் அக்கா தனுசியாவின் கணவரான அஜித்குமார் (29), த/பெ. சின்னத்தம்பி, எடையப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம் மாவட்டம் என்பவர், தன்னை அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விடுமாறு கேட்டுள்ளார். அங்கு வந்த அவர்கள் புகார்தாரர் வீட்டில் தனியாக இருப்பதையும், புகார்தாரரின் வீடு மற்றும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததையும் நோட்டமிட்டு, இருவரும் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி இருவரும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு அருகே சென்று, இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள மறைவான பகுதியில் நிறுத்திவிட்டு, கையுறைகள் மற்றும் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ராஜகுகன் கத்தியையும், அஜித்குமார் ஏர் கன்னையும் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்த புகார்தாரரை மிரட்டி நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த சொத்தின் விபரம் 9 பவுன் தங்க நகைகள் மட்டும் என்பதற்கு பதிலாக புகார்தாரர் பதற்றத்தில் தவறுதலாக 16 பவுன் நகை மற்றும் பணம் ரூ.20,000/- என கூறியது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு எதிரிகளான ராஜகுகன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொத்த சொத்துகளும் (9 சவரன் நகைகள்) மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், ஒரு கத்தி மற்றும் ஒரு ஏர் கன் ஆகியவை மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில், அஜித்குமார் மீது சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு எதிரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக, விசாரணையில் குற்றவாளிகள் கண்காணிப்பு கேமரா இல்லாத வீடுகளையே குற்றசெயலில் ஈடுபடுவதற்கு தேர்வு செய்வது தெரிய வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முன்வர வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.