தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் நகைக்கடையை உடைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

நாகர்கோவிலில் நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் ஒரு நகைக்கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டுகளை கம்பியால் அடித்து உடைத்த சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வந்து பார்த்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி பெருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பையா. இவர் அதே பகுதியில் உள்ள காமராஜர் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள் அன்பையாவின் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டுகளை கம்பியால் அடித்து உடைத்துள்ளனர். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து பார்த்தார்.

அப்போது அன்பையாவின் நகை்கடையை மர்ம நபர்கள் உடைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் அதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சுசீந்திரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அதே நேரத்தில் கொள்ளையர்கள் நகைக்கடையின் ஷட்டர் மற்றும் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் கண்ணாடி பெட்டிகளை உடைத்து அதனுள் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். அவற்றை அள்ளிக்கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

தன்னுடைய கடையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து தகவலறிந்த அன்பையா கடைக்கு விரைந்து சென்றார். அதே நேரத்தில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் நகைக்கடை உரிமையாளர் மற்றும் போலீசார் கடைக்குள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது கடையில் இருந்த 70 சரவன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.