சென்னை,
கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளான ஜூலை 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் தத்துவஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதை வழங்க உள்ளார். விருதை பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் விழாவுக்கான அழைப்பிதழை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து வழங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உச்சபட்ச விருதான ‘ஞானபீட விருது’ 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிட்டியிருக்கிறது. எனது பிறந்தநாளான ஜூலை 13 ஆம் நாள் டெல்லியில் ஞானபீட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
காஷ்மீர் மன்னர் பரம்பரையின் வழி வந்தவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், இந்தியத் தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதினை எனக்கு வழங்குகிறார். பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றுகிறேன்.
அதற்கான அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினேன். மகிழ்ந்தார்;வாழ்த்தி மகிழ்வித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.