ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகத்தின் மகன் வல்லரசு. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகள் தீபிகா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்திலேயே கணவர் வல்லரசு, இவரின் தந்தை விநாயகம், தாயார் சித்ரா ஆகிய 3 பேரும் சேர்ந்து தீபிகாவிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபிகா ஒரு மாதமாக தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். தீபிகாவின் பெற்றோர் நகை, பணம் கொடுக்க கால அவகாசம் கேட்டு வந்தனர்.
இந்தநிலையில் வரதட்சணை கொடுமையால் மனவேதனையில் இருந்த தீபிகா 3 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டில் தூக்குப் போட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபிகாவின் கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம், மாமியார் சித்ரா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார், அவர்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.