சென்னை,
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக அரசியலில் இத்தகைய தலைகீழ் மாற்றங்களுக்கு பின்னால் இருப்பது தவெக தவறவிட்ட 4,649 வாக்குகள் தான். தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, தவெக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட அந்த 10 தொகுதிகளில், மொத்தமாக 4,649 வாக்குகளை கூடுதலாகப் பெற்றிருந்தால், அக்கட்சி 118 இடங்களுடன் அறுதிபெரும்பான்மையைப் பெற்றிருக்கும்.
அவ்வாறான ஒரு சூழல் அமைந்திருந்தால், தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் ஒருவேளை ஏற்பட்டிருக்காது. இன்று நாம் காணும் இந்த அரசியல் மாற்றங்களும் இதே தன்மையோடுநிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மறைமுகமாக, இந்த மிகச்சிறிய வாக்கு வித்தியாசமே தமிழகத்தின் தற்போதைய அதிகாரப் பகிர்வையும், கட்சிகளுக்கு இடையிலான புதிய உறவுகளையும் தீர்மானித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.