சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக பிரமுகரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. திண்டுக்கல் லியோனி பேசியதாவது: ராமனின் பாதுகை அயோத்தியை ஆண்டது போல், ஸ்டாலின் அவிழ்த்து வைத்த செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் எல்லா திட்டங்களும் ஸ்டாலின் கொண்டு வந்ததுதான். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம், கோவை பெரியார் அறிவுலகம், விடியல் பயணம் என அனைத்திலும் மக்கள் உங்களை நினைக்கிறார்கள். தமிழகத்தில் உங்களது செருப்புதான் ஆட்சி செய்கிறது.
அதற்காக பரதன் இல்லை. 14 ஆண்டுகள் அயோத்தியை செருப்பு ஆண்டது. ஆனால் 14 வாரமோ, 14 மாதங்களிலோ இந்த ஆட்சி முடிவுக்கு வந்து உதயசூரியன் ஆட்சி மீண்டும் வரும்” என்றார். திண்டுக்கல் லியோனியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.