சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையி லான கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அதனை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் 55-வது புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்கிறார். கவர்னர் மாளிகையில் மதியம் 12.30 மணி்க்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் தர்மாதிகாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதிவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. மராட்டிய மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து 1992-ம் ஆண்டு முதல் வக்கீலாக மத்திய பிரதேச ஐகோர்ட்டில் பணியாற்றி வந்தார். கடந்த 2000 முதல் 2015-ம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வக்கீலாக பணியாற்றிய அவர். 2016-ம் ஆண்டு மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2018-ம் ஆண்டு நிரந்தர நீதிபதி ஆனார். கடந்த ஆண்டு கேரள ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.