சென்னை,
சென்னை அருகே கண்ணகி நகரில் கபடி பயிற்சியாளராக இருப்பவர் ராஜூ (34). இவர், மீது கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு கபடி வீராங்கனை, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் ராஜூ தனக்கு பாலியல் தொல்லை அளித்து மிரட்டியதாகவும், பின்னர் தனது வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் 3 முறை வந்த ராஜூ, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னைபோன்று பல மாணவிகள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ராஜூ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் பதுங்கியிருந்த ராஜூவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.