இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை சென்னை மண்ணடியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், முஸ்தபா உள்ளிட்டோர் நேற்று சந்தித்து த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டனர்.
இந்த நிலையில் காதர் மொய்தீன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இன்றிரவு சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ த.வெ.க. நிர்வாகிகள் ஆதரவு கேட்ட போது, அவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதற்கு கட்டுப்படுவோம். எனவே நீங்கள் எங்களிடம் கேட்பதற்கு பதில் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அவருடைய முடிவுதான் எங்களுடைய முடிவு என்று தெரிவித்துவிட்டோம்’ என்றார்.
பேட்டியின்போது , ‘ அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு கொடுத்தால் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘ அரசியலில் எதுவும் நடக்கலாம். அப்படி நடந்தால் அது பெரிய அதிசயமாகத்தான் இருக்கும். மு.க.ஸ்டாலின் எந்த முடிவாக இருந்தாலும் நல்ல முடிவைத்தான் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்று கொள்ளும். ’ என்று காதர் மொய்தீன் கூறினார்.