மின்சாரம் தாக்கி பலி 
தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. விவசாயியான இவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் தனது விவசாய நிலத்திற்கு வேலை செய்வதற்காகச் சென்றார். அப்போது, வயல்வெளியில் உயர் அழுத்த மின்சாரக் கம்பி ஒன்று எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்தது.

விவசாயி பலி

அதனை அறியாத விவசாயி நிலத்தில் நடந்து சென்றபோது தரையில் கிடந்த அந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராமல் மிதித்தார். இதனால் பயங்கரமான உயர் மின்னழுத்த மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாகச் சென்ற மற்ற விவசாயிகள், ராமு உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக மின்வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கராபுரம் போலீசார், உயிரிழந்த ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மேலப்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.