சேலம்,
மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் தராதது வருத்தம் அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் அரசு இருக்கிறது. கஞ்சா, நம்பர் லாட்டரி தமிழ்நாடு முழுக்க மிகச் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. கடந்த 6 மாதமும் மக்களுக்கு துயரமான ஆட்சியாகவே இந்த ஆட்சி நடந்துள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. 6 மாதத்தில் சிறப்பான ஆட்சி கொடுப்போம் என்றார். ஆனால் துயரமான ஆட்சி தான் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கொலை நடக்காத நாள் கிடையாது.
தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளது. இதை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆட்சியுடன் நடந்த கொலையுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. பொருளாதாரத்தை ஒப்பிடலாம். ஆனால் கொலை சம்பவங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. கொலைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
கொலை நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் நடக்கிறது.
கிராமத்தில் இருந்து நகரம் வரை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. கஞ்சா விற்பனையை இந்த அரசால் தடுக்க முடியவில்லை.
எடப்பாடி நகரத்தில் அண்மையில் ஒரு நம்பர் லாட்டரி சீட் அதிகம் விற்கப்படுவதாக நிர்வாகிகள். பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். அரசும், காவல்துறையும் ஒரு நம்பர் லாட்டரி சீட் விற்பனையை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெற தவெக அரசு தவறிவிட்டது. மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் தராதது வருத்தம் அளிக்கிறது. மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகும்
ஒரு பெண் கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்புகிறார் என்றால் ஏன் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.